இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை உள்ளிட்ட மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களின் தொகுப்பை காணலாம்.

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை:-

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நந்தினி மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி நந்தினி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்தில் வாலிபர் பலி:-

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கபிலன் (30). இவர் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோவை செல்வதற்காக அவரது நண்பர் சத்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் மற்றும் அவரது நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி:-

காஞ்சிக்கோவில் கண்ணவேலம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து வந்தது. இதையறிந்த கந்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோமதி, காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவருக்கு சுமார் 30 முதல் 35வயது இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மது விற்ற 5 பேர் கைது:-

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக வரப்பாளையம் புது அய்யம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் (50), திங்களூர் நல்லம்பாட்டி எல்.பி.பீ. வாய்க்கால் பகுதியை சேர்ந்த சுந்தரம் (56), சென்னிமலை வெப்பிலி பிரிவு சாலையை சேர்ந்த பழனிசாமி (62), சித்தோடு ஆர்.என்.புதூர் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (74), அதே பகுதியை சேர்ந்த தனகேஸ்வரன் மனைவி கருப்பத்தாள்(48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!