யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மோசடி: புகாரளிக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு
புகாரளிக்க அழைப்பு (பைல் படம்).
யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் என்ற மோசடி நிறுவனத்தில் முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் நிறுவன மோசடி வழக்கு ஈரோடு பொருளதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மனுக்களை பெற்று விசாரணை நடந்து வருகிறது. மேலும், பிணையில் வெளி வந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கையெழுத்திட்டு வரும் நவீன்குமாரை ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றிட விண்ணப்பித்துள்ளோம். அப்படி மாற்றினால் மோசடி குறித்து விசாரணைக்கு ஏதுவாக இருக்கும் என கேட்டுள்ளோம்.
இதில், நவீன்குமார் மற்றும் தொடர்புடைய 5 பேர் மட்டும் அல்லாமல், மோசடிக்கு ஏதுவாக செயல்பட்ட முகவர்கள் 60க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு போட உள்ளோம். அப்போது தான் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலீடுகளை பெற்று தர ஏதுவாகும். எனவே, இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
புகார் அளிக்கும் போது, தாங்கள் பணம் செலுத்தியதற்கான வங்கி பண பரிவர்த்தனை விவரம், யுனிக்யூ எக்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஐடி, கடவுச்சொல் போன்ற விவரங்களின் அசல் மற்றும் நகல் போன்றவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu