வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை

வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை
X

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர் திருமூர்த்தி, சித்ரா

கோபி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத கணவன்,மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்

கோபி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கணவன்,மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் திருமூர்த்தி (54). இவர் கவுந்தப்பாடியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சித்ரா(45) என்ற மனைவியும்,கார்த்திக் ராஜா(21) என்ற மகனும் உள்ளனர். கார்த்திக் ராஜா டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோபியில் உள்ள வங்கி ஒன்றில் கடன் பெற்று அய்யம்பாளையத்தில் வீடு கட்டி உள்ளார். உரக்கடையிலும் சரியான வருமானம் இல்லாத நிலையில் வீடு கட்டுவதற்காக வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார்.

கடன் தொகையை உடனடியாக செலுத்த வங்கி நிர்வாகம் கூறவே, தனியார் நிறுவனம் மூலமாக கடன் பெற திருமூர்த்தி முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் தனியாரிடமும் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்காத நிலையில் திருமூர்த்தியும், அவரது மனைவியும் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திருமூர்த்தியின் மகன் கார்த்திக் ராஜா நண்பர் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் திருமூர்த்தி அவரது மனைவி சித்ரா ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது கடனை நினைத்து கவலைப்பட்ட கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்த இருவரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் திருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாத நிலையில், இது குறித்து அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கார்த்திக் ராஜா அங்கு வந்து கதவை திறந்து பார்த்த போது, தந்தையும், தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஸ் தலைமையில் போலீசார் அங்கு சென்று கணவன், மனைவியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து திருமூர்த்தியின் தந்தை பழனியப்பன் கூறும் போது, வீடு கட்டுவதற்காக வங்கி கடன் பெற்று இருந்த நிலையில், கடனை திரும்ப செலுத்த முடியாத வேதனையில் மகன் இருந்து வந்ததாகவும், அதனாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அய்யம்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!