ஈரோடு இடைத்தேர்தல்: செங்கலுடன் உதயநிதி - அண்ணாமலை மாறி, மாறி பிரசாரம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் செங்கலுடன் மாறி, மாறி பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வந்தார். பின்னர் அவர் கணபதி நகர், நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே பேசும்போது, கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தபோது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள்.
ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் (பொட்டல் காடாக கிடக்கும் இடத்தின் படத்தை காட்டினார்). அங்கே இருந்தது ஒரே ஒரு செங்கல்தான் (செங்கலை எடுத்து மக்களிடம் காட்டினார்). அதையும் நான் எடுத்து வந்து விட்டேன். இந்த சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என்று அறிவித்து இருக்கிறார். இதுதான்பாஜகவும் அண்ணா தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்றார்.
இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார். அப்போது, 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே, 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கல்லை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கல்லை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - பாஜக தலைவர் அண்ணாமலை செங்கல்லை காட்டி மாறி, மாறி பிரச்சாரம் செய்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu