ஆப்பக்கூடல் அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே நல்லிகவுண்டன்புதூரில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
HIGHLIGHTS

விபத்தில் உயிரிழந்த கார்த்திக்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள நல்லிகவுண்டன்புதூரில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி இந்திராநகரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 33). இவர், தற்போது, கூத்தம்பூண்டி ரைஸ் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் உணவகம் ஒன்றை நடத்தி கொண்டு, அங்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் கார்த்திக் சத்தி - பவானி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, நல்லிகவுண்டன்புதூர் பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்துள்ள வளைவில் சென்ற போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆப்பக்கூடலில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.