கோபி கல்குவாரி விபத்தில் இருவர் உயிரிழப்பு: கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது

கோபி கல்குவாரி விபத்தில் இருவர்  உயிரிழப்பு: கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட லோகநாதன், ஈஸ்வரி, செல்வம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கல்குவாரி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கல்குவாரியை 9 ஆண்டுகள் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே கல்குவாரி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கல்குவாரியை 9 ஆண்டுகள் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாசநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 70). இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 65). இவருடைய பெயரில் கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் வனப்பகுதிக்கு செல்லும் சாலையில் லோகநாதன் கல்குவாரி இயக்கி வருகிறார்.

இங்கு கோபி, நம்பியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (20ம் தேதி) மாலை கல்குவாரியில் உள்ள பாறைகளை தகர்ப்பதற்காக வெடி வைக்கப்பட்டது. அப்போது பாறைகள் வெடித்து சிதறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.


இந்த வெடி விபத்தில் கோபி அருகே உள்ள நம்பியூர் அயலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50), கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாட்டவள்ளியைச் சேர்ந்த அஜீத் (வயது 27) ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கல்குவாரி உரிமையாளர்களான லோகநாதனையும், ஈஸ்வரியையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று (21ம் தேதி) அதிகாலை லோகநாதன், ஈஸ்வரி போலீசாரிடம் பிடிபட்டனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வெடி விபத்து நடந்த கல்குவாரியை இயக்க கடந்த 2015ம் ஆண்டு வரையே அவர்கள் உரிமம் பெற்று இருந்ததும், அதற்கு பிறகு கடந்த 9 ஆண்டுகள் குவாரிய சட்டவிரோதமாக கணவன், மனைவி இயக்கி வந்ததும் அம்பலமாகி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த புகாரின்பேரில் அதிகாரிகள் அவ்வப்போது குவாரிக்கு வந்து சீல் வைப்பதும், அதையும் மீறி கல்குவாரி இயங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லோகநாதன், ஈஸ்வரி, கல்குவாரியின் மேலாளர் செல்வம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து 3 பேரும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், ஈஸ்வரி கோவை மத்திய சிறையிலும், லோகநாதனும், செல்வமும் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!