தாளவாடி வனப்பகுதியில் முன்னாள் ஊராட்சி செயலாளரை கொல்ல முயன்ற இருவர் கைது

தாளவாடி வனப்பகுதியில் முன்னாள் ஊராட்சி செயலாளரை கொல்ல முயன்ற இருவர் கைது

Erode news- கைது செய்யப்பட்ட பால்பாண்டி, கங்கப்பா.

Erode news- ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் முன்னாள் ஊராட்சி செயலாளரை கொல்ல முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

Erode news, Erode news today- கரூர் மாவட்டம் புகளூர் அருகே உள்ள கே.பரமத்தியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், ஆரியூர் ஊராட்சி முன்னாள் செயலாளர் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், டிரைவர் வேலைக்கு சென்று விட்டார்.

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்த நிலையில், கார்வழி அத்தப்பகவுண்டன் வலசு காலனியைச் சேர்ந்த ஜெயகாளியம்மாள் (வயது 30) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். ஜெயகாளியம்மாளின் கணவரும் இறந்து விட்டார். இவருக்கு இரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு சரவணனுக்கும், ஜெயகாளியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், சரவணன் இவரையும் பிரிந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயகாளியம்மாள் சரவணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதற்காக, தேனி மாவட்டம் பெரியகுளம் செங்குளத்துபட்டியைச் சேர்ந்த ஜெயகாளியம்மாளின் உறவினரான பால்பாண்டி (வயது 43), ஈரோடு மாவட்டம் தாளவாடி சிக்கள்ளியைச் சேர்ந்த பால்பாண்டியின் நண்பரான கங்கப்பா (வயது 60) ஆகியோரை ஏவினார்.

அதனைத் தொடர்ந்து, பால்பாண்டி சரவணனிடம் உங்களையும், ஜெயகாளியம்மாளையும் சேர்த்து வைக்கிறேன் எனக் கூறி சிக்கள்ளி வனப்பகுதிக்கு சரவணனை அழைத்துச் சென்றார். அங்கு, பால்பாண்டி, கங்கப்பா ஆகிய இருவரும் சரவணனை கட்டையால் தாக்கி, கை, கால்களை கம்பியால் கட்டி கொல்ல முயன்றனர்.

சரவணன் அவர்களிடம் இருந்து தப்பி அருகே இருந்த விவசாய தோட்டத்திற்கு சென்று ரமேஷ் என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து, ரமேஷ் உடனடியாக தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்த பால்பாண்டி மற்றும் கங்கப்பா இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

பின்னர், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், ஜெயகாளியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி செயலாளரை வனப்பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தாளவாடி மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story