சத்தியமங்கலம் அருகே மானை வேட்டையாடிய இருவர் கைது: கிரைம் செய்திகள்..

சத்தியமங்கலம் அருகே மானை வேட்டையாடிய இருவர் கைது:  கிரைம் செய்திகள்..
X

கடம்பூரில் மானை வேட்டை கைது செய்யப்பட்ட இருவர். அடுத்த படம்: அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சொக்கப்பன்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் சருகு மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மான் வேட்டையாடிய இருவர் கைது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் காப்புக்காடு தும்பக்கட்டை சராக வனப்பகுதியில் கடம்பூர் வனத் துறையினர் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மூன்று வேட்டை நாய்களுடன் இருவர் கையில் சருகு மான் ஒன்றை வேட்டையாடி கொண்டு வந்தவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் கடம்பூர் அடுத்த அணைக்கரை கிணத்தொட்டி பகுதியை சேர்ந்த வீரன் (22) மற்றும் ராமர் (27) இருவரும் சருகு மான் ஒன்றை வேட்டையாடிய குற்றத்திற்காக கடம்பூர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட வீரன், ராமர் இருவரிடம் இருந்து சருகு மான் மற்றும் இரண்டு அரிவாள்களை பறிமுதல் செய்த கடம்பூர் வனத்துறையினர் நேற்று மாலை கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

அந்தியூர் தாலுகா நெரிஞ்சிப்பேட்டை மீராசா வீதியை சேர்ந்தவர் சொக்கப்பன் (வயது 56). தொழிலாளி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சொக்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்த முதியவர் பலி

நாமக்கல் மாவட்டம், காவேரி ஆர்.எஸ்.ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி (வயது 70). இவர் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர்' மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்து, கவுதமி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். கார்த்திகேயனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் கரும்பு வெட்டிய கூலி பணத்தை வாங்கி சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதையறிந்த கவுதமி, கார்த்திகேயனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

கொடுமுடி ஊஞ்சலூர் ஆராம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் மாலினிஸ்ரீ (வயது 26). இவர் பி.டெக் படித்து விட்டு, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். மாலினிஸ்ரீக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்தனர். ஆனால் வரன் ஏதும் அமையாததால் மாலினிஸ்ரீ விரக்தியில் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாலினிஸ்ரீ கடந்த மாதம் 22ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அங்கு மாலினிஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story