வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டம்

வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின மலைவாழ் மக்கள்.

வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பர்கூர் தாமரைக்கரையில் பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பர்கூர் தாமரைக்கரையில் பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பர்கூர் வனப்பகுதியை தந்தை பெரியார் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளதை கண்டித்தும், இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பர்கூரை அடுத்த தாமரைக்கரையில் பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பழங்குடி இன மக்கள் சங்க செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார்.

அப் போது அவர் கூறியதாவது:- ஈரோடு வனக்கோட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர், தட்டக்கரை மற்றும் சென்னம்பட்டி ஆகிய 4 வனச்சரகங்களை உள்ளடக்கிய 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதி தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக கடந்த மாதம் 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. வன உரிமை சட்டம் 2006-ன் படி மக்களின் பாரம்பரிய உரிமைகளை உறுதி செய்திட ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே இந்த கிராம சபையின் ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்டுள்ள வனவிலங்கு சரணாலய அறிவிப்பு. வன உரிமை சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. வனவிலங்கு சரணாலயம் மற்றும் புலிகள் காப்பகத்தில் கால்நடைகள் மேய்ச்சலை சென்னை ஐகோர்ட்டு தடை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய மேல்முறையீடு எதுவும் செய்யாமல் வனவிலங்கு சரணாலயம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதனால் வனப்பகுதியில் காலம் காலமாக வாழ்ந்து வரும் பர்கூர் செம்மை நிற மாடு இனம் அழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் கால்நடைகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிற மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே தமிழக வனத்துறையின் தன்னிச்சையான இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பழங்குடி இன மக்கள் சங்க மாநில நிர்வாகி வி.பி.குணசேகரன், சட்ட ஆலோசகர் கிருஷ்ணகுமார், நிர்வாகி பி.ஜே.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கொங்காடை, தம்புரெட்டி, தாளக்கரை, சோளகணை, பர்கூர், தாமரைக்கரை, தேவர்மலை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பழங்குடி இன மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!