பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை பார்வையிட 4வது ஆண்டாக தடை

பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை பார்வையிட 4வது ஆண்டாக தடை
X

கழுகு பார்வையில், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி.

ஆடிப்பெருக்கு விழாவான நாளை (ஆக.,03) பவானிசாகர் அணையின் மேல் பகுதி நீர்த்தேக்கத்தை பொதுமக்கள் பார்வையிட 4வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவான நாளை (ஆக.,03) வியாழக்கிழமை பவானிசாகர் அணையின் மேல் பகுதி நீர்த்தேக்கத்தை பொதுமக்கள் பார்வையிட 4வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியை, ஆடி, 18 ஒருநாளில் மட்டும் மக்கள் பார்வையிட, சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காகவே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள். அணையின் பரந்து, விரிந்த நீர்த்தேக்க பகுதியை பார்வையிட்டு மகிழ்வார்கள். இந்நிலையில், நாளை (வியாழக்கிழமை) 3ம் தேதி ஆடி 18 விழா கொண்டாடப்படுகிறது. மேலும், நாளை உள்ளூர் விடுமுறை என்பதால், அணையை சுற்றி பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்த நிலையில், தற்போது, அணையின் நீர்மட்டம் 83.85 அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு ஆடி 18ஆம் பெருக்கு நாளான நாளை (வியாழக்கிழமை) பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பவானிசாகர் பூங்கா எப்பொழுதும் போல் முழுமையாக செயல்படும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு செல்ல தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த (2022) ஆண்டும், இந்த ஆண்டும் (2023) அணையின் நீர்மட்ட பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது நான்காவது ஆண்டாக, நீர்தேக்கத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!