பவானி அருகே கறிக்கடையில் நூதன மோசடி: கணவன் - மனைவி உள்பட மூவர் கைது

பவானி அருகே கறிக்கடையில் நூதன மோசடி: கணவன் - மனைவி உள்பட மூவர் கைது
X

கைது செய்யப்பட்ட 3 பேரையும் படத்தில் காணலாம்.

பவானி அருகே கறிக்கடையில் பணம் கொடுக்காமல் சில்லறை கேட்டு நூதன மோசடியில் ஈடுபட முயன்ற கணவன் - மனைவி உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்

பவானி அருகே கறிக்கடையில் பணம் கொடுக்காமல் சில்லறை கேட்டு நூதன மோசடியில் ஈடுபட முயன்ற கணவன் - மனைவி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள கண்ணப்பள்ளி, வெங்கடரெட்டியூரைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி செல்வி (வயது 42). கறிக்கடை வியாபாரியான இவர், குறிச்சி பிரிவு அருகே கறிக்கடை நடத்தி வருகிறார்.

வழக்கம் போல், நேற்று வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த ஒரு ஆண், 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு கோழிக்கறி கேட்டுள்ளார். செல்வி கறியை வெட்டி கொடுத்துவிட்டு சில்லரை கொடுத்த போது 100 ரூபாய் நோட்டு அழுக்காக உள்ளதாக கூறி அந்த நபர் வேறு நோட்டு கேட்டுள்ளார்.

அதே நேரத்தில், அவருடன் வந்த ஒரு பெண், 500 ரூபாயை கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். மற்றொரு பெண், பணம் கொடுக்காமலே, 500 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால், சந்தேகமடைந்த செல்வி அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல்துறை விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம், அழகுபாறை, சந்தன மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 42), இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 35), மதுரை மாவட்டம், கன்னியாம்பட்டி விலக்கைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 42) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் மூவரும் கடைகளுக்கு சென்று குழப்பத்தை விளைவித்து, பணம் கொடுக்காமல் மோசடி செய்து வந்ததும் தெரிந்தது. இதனையடுத்து, மூவரையும் கைது செய்த காவல்துறையினர், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!