ஈரோடு: ஒரே நாளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பேர் கைது

ஈரோடு: ஒரே நாளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பேர் கைது
X
ஈரோடு ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு.

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் போலீசார் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வருபவர்கள், அதனை பதுக்கி அதிக விலைக்கு விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் அந்தந்த டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். ஈரோடு பவானி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் மேட்டூர்-பவானி ரோட்டில், சித்தார் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 86 கிலோ எடை உள்ள புகையிலை பொருட்கள் பெங்களூரில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பவானி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(22), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (23), பவானி சேர்ந்த முனுசாமி (45),ரத்தின பாண்டியன் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வீரப்பன் சத்திரம் போலீசார் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட 2050 கிராம் குட்கா பான்மசாலா புகையிலை பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் விற்பனைக்காக வைத்திருந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதைப்போல் பவானி பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர் இதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதைப்போல் அம்மாபேட்டை, பெருந்துறை, அந்தியூர், கடத்தூர், வெள்ளித்திருப்பூர், கோபி, கவுந்தப்பாடி இப்பகுதிகளில் உள்ள கடைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற அதிரடி சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!