மக்களுடன் முதல்வர் திட்டம்: சென்னிமலையில் துவக்கி வைக்கும் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தை அமைச்சர் முத்துசாமி வரும் 11ம் தேதி சென்னிமலையில் தொடங்கி வைக்கவுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வரும் 11ம் தேதி இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி 11ம் தேதி காலை சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரவலசு, முகாசிபுலவன்பாளையம், புங்கம்பாடி, குட்டப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை வெள்ளோடு அண்ணமார் திருமண மண்டபத்தில் துவக்கி வைக்கவுள்ளார்.
மேலும், 11ம் தேதி கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபாளையம், மேவானி, பாரியூர், பெருந்தலையூர், சவுண்டபூர் ஆகிய ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளுக்கு எஸ்.கணபதிபாளையம் சமுதாயநலக்கூடத்தில் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 214 கிராம ஊராட்சிகளுக்கு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 72 முகாம்கள் நடைபெறுகிறது.
இம்முகாமில் எரிசக்தி மற்றும் டேன்ஜெட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 44 சேவைகள் வழங்கப்படவுள்ளது.
எனவே, கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களுடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் மனுக்களை விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu