தாளவாடி போலீசாரால் கைது செய்யப்பட்ட விவசாய சங்கத் தலைவர் விடுதலை

தாளவாடி போலீசாரால் கைது செய்யப்பட்ட விவசாய சங்கத் தலைவர் விடுதலை
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட விவசாய சங்கத் தலைவர் ரவிக்குமார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் விவசாய சங்கத் தலைவர் ரவிக்குமார் கைதுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

தாளவாடியில் விவசாய சங்கத் தலைவர் ரவிக்குமார் கைதுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனத்துறையினர் தாளவாடி போலீசில் புகார் அளித்தார். அதில், கடந்த 20ம் தேதி சிமிட்டஹள்ளியில் ரங்கசாமி கோவில் பகுதியில் காட்டுப்பன்றிகளை வலை வைத்து பிடித்து வருவதாக தகவல் கிடைத்து சென்றோம். அப்போது, வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்த ஐந்து பேர் தப்பினர். மைசூரை சேர்ந்த மனோஜ் என்பவர் மட்டும் சிக்கினார்.

அவரிடமிருந்து இரண்டு காட்டுப்பன்றிகள், வலைகளை பறிமுதல் செய்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது, விவசாயிகள் சங்க தலைவர் ரவிக்குமார், மகேந்திரன், சேகர் மற்றும் பொது மக்கள் என, 60 பேர் ஜீப்பை வழி மறித்து தகாத வார்த்தை பேசி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தனர். பிடித்து வைத்திருந்த மனோஜை தப்பிக்க வைத்துள்ளனர். அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தும், பொதுமக்களை தூண்டி விட்டனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாளவாடி போலீசார் நேற்று விவசாய சங்க தலைவர் ரவிக்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, தாளவாடி அருகே சிமிட்டஹள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் ஜீரகள்ளி வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விவசாய சங்க தலைவர் ரவிக்குமாரை கைது செய்தனர்.

இதனையடுத்து, வருகின்ற நவம்பர் 5ம் தேதி தாளவாடியில் நடைபெற உள்ள விவசாயிகள் மனு அளிக்கும் போராட்டத்தை காரணம் கருதி விவசாய சங்க தலைவர் ரவிக்குமார் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்று காவல்துறை மீது குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், நேற்றிரவு விவசாய சங்க தலைவர் ரவிக்குமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தாளவாடி பேருந்து நிலையத்தில் தாளவாடி விவசாய சங்கத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில், விவசாய சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story