அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: நாளை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைப்பு

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: நாளை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைப்பு
X

அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையம்.

3 மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (17ம் தேதி) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

3 மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (17ம் தேதி) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரள மாநிலத்தில் பயணித்து மீண்டும் தமிழ்நாட்டில் அத்திக்கடவு என்ற இடத்தில் கோவை மாவட்டம் பில்லூர் அணை வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வந்தடைகிறது.

பின்னர், அங்கிருந்து 75 கி.மீ. தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது. மொத்தம் 225 கி.மீ. தூரம் பயணிக்கும் பவானி ஆற்றில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருந்து வரும் சிற்றாறுகளும் கலக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது, ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சி பகுதிகளான அவிநாசி, அன்னூர், காரமடை, திருப்பூர் சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று நிரப்பி நிலத்தடி நீர் செறிவூட்டுதல் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஈரோடு, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் கனவு திட்டமாகவும், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக அத்திக்கடவு-அவிநாசி திட்டம் இருந்து வந்த இத்திட்டத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி, திட்டத்துக்கு தேவையான ரூ.1,652 கோடி ரூபாயை ஒதுக்கினார். அவிநாசியில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அடிக்கல் நாட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்தது.

தொடர்ந்து, நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடந்து வந்தன. இத்திட்டத்துக்கு, மூன்று மாவட்டங்களிலும், 1,045 குளம், குட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, நீர் செறிவூட்டப்பட உள்ளது. இதற்காக 1,046 கி.மீ நீளத்துக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. ஆறு இடங்களில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நாளை (17ம் தேதி) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். திட்டத்துக்கு ரூ.1,916.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்ட தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil