ஈரோடு கனி மார்க்கெட் இன்று 2வது நாளாக கடையடைப்பு
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் உள்ள கடைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.
ஈரோடு கனி மார்க்கெட் இடத்தை காலி செய்யக்கோரி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஜவுளி வியாபாரிகள் புதன்கிழமை (இன்று) 2வது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அப்துல் கனி ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. அங்கு 240 தினசரி கடைகளும், 720 வார சந்தை கடைகளும் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் வளாகத்தில் புதிய வணிக வளாகம் சுமார் ரூ. 60 கோடி செலவில் 4 தளங்களுடன் 292 கடைகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது.
கடைகள் ஒதுக்குவதற்காக ஏலம் விடப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு கடைக்கும் சராசரியாக ரூ.8 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை டெபாசிட் தொகையும், வாடகையாக ரூ.31 ஆயிரத்து 500 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடை வாடகை மற்றும் வைப்புத்தொகை அதிகமாக இருந்ததால் கடைகளை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை. இதனால் வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
வாட கையை குறைத்து ஏற்கனவே உள்ள ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கனி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததுடன், தற்போது புதிய வணிக வளாகத்தை சுற்றி உள்ள கடைகளை வியாபாரிகள் 60 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கடைகளை காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதை கண்டித்து கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று நடைபெற வேண்டிய வாரச்சந்தை நடைபெறவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஜவுளி வியாபாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது புதிய வணிக வளாகத்தில் வியாபாரிகள் ஏலம் எடுக்க வசதியாக டெபாசிட் தொகையை குறைப்பது தொடர்பாகவும், வாடகை அதிகமாக உள்ளதால் கடையை இரண்டாக பிரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மற்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு வரும் தீபாவளி வரை இங்கு வியாபாரம் செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் வைத்த கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கவில்லை என தெரிகிறது.
இதனால், கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சங்கத்தினர் கூடி ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கனி மார்கெட் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu