ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
ஈரோட்டில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
ஈரோடு பெரிய வலசு கொங்குநகர், அண்ணா தியேட்டர் பகுதியில் பொன்னுசாமி (வயது 60) என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை செயல்பட்டு வருகின்றது. இங்கு வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான நிலவு, ஜன்னல் போன்றவற்றிக்கான பல்வேறு வகையான மரங்கள் உள்ளது. மேலும், பர்னிச்சர் பொருட்களும் சொந்தமாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று மாலை வேலை முடிந்ததும் மரக்கடையை உரிமையாளர் பொன்னுசாமி பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவு 2 மணியளவில் மரக்கடையில் இருந்து கரும்புகை கிளம்பி உள்ளது. இதையடுத்து அங்குள்ள தறிப்பட்டறைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் உடனடியாக ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறை நிலைய அலுவலர் லெமர் தம்பையா தலைமையில் 2 வாகனங்களில் சென்ற வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஆனால் மரங்கள், ரீப்பர் கட்டைகள் நன்கு காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவி எரிந்ததால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்துவிட்டது.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் 4 முறை சென்று தண்ணீரை நிரப்பி வந்து பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. பின்னர் 2 டேங்கர் டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் தொடர்ந்து நிரப்பி பீய்ச்சி அடித்தனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறினர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் எனவும், சேத மதிப்பு 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu