ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
கோடை விளையாட்டுப் பயிற்சி முகாம்.
ஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) துவங்குகிறது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் 18 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.200 ஆகும். இதனை வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் செலுத்தி பயிற்சியில் சேரலாம்.
கைப்பந்து பயிற்சியாளர் பொற்கொடி, தடகள பயிற்சியாளர் புவனேஷ்வரி, கூடைப்பந்து பயிற்சியாளர் பிரியங்கா, கால் பந்து பயிற்சியாளர் சத்யா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் செல்வன் ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu