கோபியில் கல்வியின் நிலை குறித்த ஆய்வு: தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி
கோபி பிகேஆர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கல்வியின் நிலை குறித்த தன்னார்வலர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சியில் எடுக்கப்பட்ட படம்.
கல்வியின் நிலை குறித்த ஆய்வை செய்ய தன்னார்வலர்களுக்கு 3 நாள் மாவட்ட அளவிலான பயிற்சி கோபி பிகேஆர் மகளிர் கல்லூரியில் தொடங்கியது.
இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் அவர்களின் கற்றல் நிலையை தெரிந்து கொள்வதற்கான ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வின் மூலம் 3-16 வயதுடைய குழந்தைகளின் சேர்க்கை நிலையை மற்றும் 5-16 வயதுடைய குழந்தைகளின் வாசித்தல் மற்றும் கணித திறனில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்திய அளவிலும் மாநில அளவிலும் மற்றும் மாவட்ட அளவிலும் 2005 முதல் இந்த ஆய்வானது சுமார் 500 அமைப்புகளிலிருந்து 30,000 ஆய்வாளர்களால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா அளவிலான 28 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் அசர் ஆய்வு சுமார் 616 மாவட்டங்களில் 19,000 கிராமங்களில் உள்ள ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை சென்றடைந்தது. இந்நிலையில், 2024ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் சுடர் அமைப்பு இந்த ஆய்வை 30 கிராமங்களில் மேற்கொள்கிறது.
சுடர் அமைப்பின் இயக்குனர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் சுப்பிரமணியம், பி.கே.ஆர்.மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் தனலட்சுமி, ஆங்கிலத் துறை இணைப்பேராசிரியர் ரம்யா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திவ்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ப்ரதம் பவுண்டேசன் மாநில பயிற்சியாளர்கள் தனசேகர், ஆர்த்தி ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை சுடர் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தேன்மொழி,.பழனிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu