சத்தியமங்கலம் அருகே மகனை கட்டையால் அடித்துக் கொலை: தந்தை கைது

சத்தியமங்கலம் அருகே மகனை கட்டையால் அடித்துக் கொலை: தந்தை கைது
X

கைது செய்யப்பட்ட பெத்தநாயக்கர்.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த மகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த கானக்குந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெத்த நாயக்கர் (65), கூலி வேலை செய்து வருகிறார், இவருக்கு திருமணமாகி பாப்பம்மாள் மனைவியும், செல்வன் மற்றும் முருகன் (33) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த செல்வன் திருமணமாகி சத்தியமங்கலம் கெஞ்சனூரில் குடியிருந்து கொண்டு வருகிறார். இரண்டாவது மகன் முருகன் தனது பெற்றோருடன் கானக்குந்தூர் பகுதியில் குடியிருந்து கொண்டு கூலி வேலை செய்து வந்தார். முருகனுக்கு மதுப்பழக்கம் உள்ளதால் அவ்வப்போது தனது தந்தை பெத்தநாயக்கரிடம் பணம் கேட்டும், வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்க கோரியும் சண்டையிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த கடந்த 19-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் வீட்டுக்கு வந்த முருகன் குடிபோதையில் தனது தந்தை பெத்தநாயக்கரிடம் பணம் கேட்டும் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்கும்படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தந்தை மகன் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த பெத்தநாயக்கர் அருகில் கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து தனது மகன் முருகனை தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே முருகன் கீழே விழுந்து இறந்துள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த பெத்த நாயக்கர் இறந்து போன தனது மகன் முருகனை அருகிலுள்ள சோளத்தட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு காட்டு பகுதிக்குள் சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து மறுநாள் இரவு தகவலறிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை மூங்கில் கட்டையால் அடித்து கொன்றதாக தந்தை பெத்தநாயக்கரை போலீசார் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!