பழுதடைந்த செல்போன் விற்பனை: பேராசிரியைக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு

பழுதடைந்த செல்போன் விற்பனை: பேராசிரியைக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு

இழப்பீடு (பைல் படம்).

பழுதடைந்த செல்போனை விற்றதால் அவருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க ஈரோடு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோபியைச் சேர்ந்த பேராசிரியைக்கு பழுதடைந்த செல்போனை விற்றதால் அவருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க ஈரோடு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி நல்லகவுண்டன்பாளையம் துளசி நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மனைவி லீலாவதி என்கிற நீலாவதி. கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 23-1-2023 அன்று கோபி சிக்னல் அருகே உள்ள ஒரு செல்போள் கடையில் இருந்து ரூ.18 ஆயிரத்து 990 மதிப்பில் செல்போன் வாங்கினார். அது 26-1-2023 அன்று தானாகவே அணைந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்ய பேராசிரியை லீலாவதி செல்போன் வாங்கிய கடையில் கொண்டு கொடுத்தார்.

கடையின் உரிமையாளர் செல்போனை வாங்கி பார்த்து விட்டு ஆன் செய்து போன் நன்றாக இருப்பதாக கூறி கொடுத்தார். ஆனால் பிரச்சினை தொடர்ந்தது. எனவே கடை உரிமையாளர் ஆலோசனைப்படி அங்குள்ள தனியார் செல்போன் நிறுவன சேவை மையத்துக்கு கொண்டு சென்றார்.

அங்கு ஊழியர்கள் சோதனை செய்தபோது அது பழுதடைந்த போன் என்பதும், பேராசிரியை அதை வாங்கும் முன்பே காலாவதி தேதி செயல்பட தொடங்கி இருந்ததையும் தெரிவித்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த பேராசிரியை லீலாவதி, இதுகுறித்து ஈரோடு நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் எஸ்.பூரணி. உறுப்பினர்கள் வி.பி.வேலுசாமி, எஸ்.வரதராஜபெருமாள் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில், பழுதடைந்த செல்போனை விற்பனை செய்த கடை உரிமையாளர் சேவை மையம் மற்றும் மண்டல சேவை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பேராசிரியை லீலாவதிக்கு புதிய செல்போன் அல்லது ரூ.18 ஆயிரத்து 999ஐ ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும். மேலும், இழப்பீட்டு தொகையாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் பேராசிரியை லீலாவதி தரப்பில் வக்கீல் எம்.தன்ராஜ் ஆஜரானார்.

Tags

Next Story