ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
X

ஈரோட்டில் நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றன.

நாடாளுமன்றத் தேர்தல், 2024ஐ முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் , ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் 2024 வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) சேர்த்து 2,530 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, இன்று (7ம். தேதி) 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பயிற்சி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி 10,413 வாக்குச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பயிற்சி வகுப்புடன், வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6,992 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிக்கான சான்று வழங்கப்படும். இவ்வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று தாங்கள் பணியாற்றும் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்கான சான்றினை காண்பித்து வாக்குகளை செலுத்தலாம்.

3,063 நபர்கள் இதுவரை தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மூன்றாம் கட்ட பயிற்சி வருகின்ற 13ம் தேதி நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 12டி படிவம் வழங்கப்பட்டதன் அடிப்படையில், வாக்குகள் செலுத்தும் பணி கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று (6ம் தேதி) வரை 2,843 நபர்கள் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.47 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.2.26 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்களை செலுத்தியதன் அடிப்படையில் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.2.23 கோடி பறிமுதலில் உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் (1950) 55 புகார்களும், சி-விஜில் மூலமாக 34 புகார்களும் என 89 புகார்கள் பெறப்பட்டு, அனைத்து புகார்களும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். 1,125 வாக்குசாவடி மையங்கள் வெப் ஹோஸ்டிங் மூலமாக கண்காணிப்படவுள்ளது.

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பானது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரங்கம்பாளையம் டாக்டர்.ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் சென்னிமலை சாலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானி சட்டமன்ற தொகுதியில் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் சத்தியமங்கலம் காமதேனு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரங்கம்பாளையம் டாக்டர்.ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் சென்னிமலை சாலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி) ஸ்வீப் கண்காணிப்பு அலுவலர் மணீஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாநகர பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business