தாளவாடி அருகே பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா: ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து உற்சாகம்
தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயில் நடைபெற்ற சாணியடித் திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசி கொண்டாடிய போது எடுத்த படம்.
தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோயிலில் இன்று (நவ.3) நடைபெற்ற சாணியடித் திருவிழாவில், தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமையான பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் 3வது நாளில் சாணியடித் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு விழா இன்று (நவம்பர் 3) காலை துவங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள பசு மாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு, கோயிலின் பின்புறம் குவிக்கப்பட்டது. இதையடுத்து, அலங்கரிக்கப் பட்ட பீரேஸ்வரருக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர், கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை, உருண்டைகளாக பிடித்து, ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, கொண்டாடினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் விழாவை ரசித்தனர். பின் அனைவரும் குளத்தில் குளித்து விட்டு, பீரேஸ்வரரை வழிபட்டனர். இந்தத் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu