கோபி: நாளை நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு
கோப்பு படம்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட் அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமானது, கோபிசெட்டிபாளையம் வாய்க்கால்மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு - சத்தியமங்கலம் பிரதான சாலை வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது. இதையொட்டி, கோபிசெட்டிபாளையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 12 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 1000-க்கும் மேற்பட்ட போலீசார் எனது தலைமையில் கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu