ஈரோடு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: முதியவர் கைது
Erode news- மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவர் தங்கவேல். (கோப்பு படம்)
Erode news, Erode news today- கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.25 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கோவையை சேர்ந்த முதியவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு கவுண்டச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 82). இவரது மகன் அருள்வேல். இந்த நிலையில் ராமசாமிக்கு கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (வயது 79) என்பவர் தெரிந்தவர் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது, ராமசாமியிடம் தங்கவேல், உங்கள் மகனுக்கு கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய ராமசாமியிடம் தங்கவேல் ரூ.5 லட்சம் தரும்படி கேட்டுள்ளார். அவரும் ரூ.5 லட்சம் கொடுத்து உள்ளார்.
அதுமட்டுமின்றி, ராமசாமி தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என 44 பேரிடம் ரூ.2.25 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வாங்கி, அவர்களுக்கும், பாரதியார் பல்கலைக்கழகத்தில், அரசு வேலை வாங்கித் தரும்படி அந்த பணத்தை தங்கவேலிடம் கொடுத்துள்ளார்.
மேலும், பணம் கொடுத்த அனைவருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தங்கவேல் கூறி ஏமாற்றியுள்ளார். ஆனால் அவர் கூறியது போன்று, அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி, இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் விசாரிக்க சென்றனர். அப்போது குற்றப்பிரிவு போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஏற்கனவே கோவை வடவள்ளியில் இதேபோன்று அரசு வேலை வாங்கி தருவதாக தங்கவேல் ரூ. 29 லட்சம் மோசடி செய்த தொடர்பாக அவரை போலீசார் கோவை சிறையில் அடைத்துள்ளது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவர் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த வழக்கும் பதிவு செய்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட தங்கவேலிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu