சாலையோர கடைகளால் ஈரோடு கனி மார்க்கெட் வளாக வியாபாரிகளின் வர்த்தகம் பாதிப்பு

சாலையோர கடைகளால் ஈரோடு கனி மார்க்கெட் வளாக வியாபாரிகளின் வர்த்தகம் பாதிப்பு
X
சாலையோர தற்காலிக கடைகளால் வெறிச்சோடி காணப்படும் ஈரோடு அப்துல்கனி ஜவுளி வணிக வளாகம்.
ஈரோடு மணிக்கூண்டு அருகில் சாலையோர ஜவுளி கடைகளால், கனி மார்க்கெட் வியாபாரிகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மணிக்கூண்டு சாலையில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டதால், கனி மார்க்கெட் வியாபாரிகள் வேதனையடைந்து காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் வணிக ஜவுளி வளாகம் அமைந்துள்ளது. அங்கு 500க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதனை சுற்றிய டிவிஎஸ் வீதி, மணிக்கூண்டு சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜி சாலை சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட், பனியன் மார்க்கெட், ஆர்கேவி சாலை பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்களின் மொத்த விற்பனை நடந்து வருகிறது.

இங்கு ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதியினர் நிரந்தர, தற்காலிக கடைகள் அமைத்து ஜவுளி விற்பனை செய்கின்றனர். பன்னீர்செல்வம் பூங்காவை கடந்து, மணிக்கூண்டு சாலை வழியாக பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், பிற வாகனங்களை கடந்த, 3 நாட்களாக தடை செய்து, ஜவுளி வியாபாரத்துக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர்.


பன்னீர்செல்வம் பூங்கா அருகே பேரிக்காட் போட்டு தடுத்ததால், மணிக்கூண்டு சாலை முழுமையையும் இருபுறம், நடுவிலும் கட்டில்கள், சாலை ஓரம், சாலையின் நடுவே தார் பாய், பிற பாய் போட்டும் 'டி' வடிவிலான பெரிய கம்புகளில் ரெடிமேட் ஆடைகளை வைத்து நின்று கொண்டும் ஜவுளி விற்பனை நடக்கிறது. இதில், 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால், கிராமங்களில் இருந்து வருவோர், இவர்களிடம் ஜவுளிகளை வாங்கி கொண்டு, கனி மார்க்கெட் உட்பட நிரந்தர கடைகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இப்பிரச்சினை அதிகமானதால், கனி மார்க்கெட் மற்றும் பிற வீதிகளில் உள்ள ஜவுளி வியாபாரிகள், மணிக்கூண்டு சாலையில் உள்ள தற்காலிக கடைகளை முற்றுகையிட்டும், அங்கு கடை போடக்கூடாது என்றும் பிரச்சினையில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு தற்காலிக கடைகள், நடுசாலையில் போடப்பட்ட கடைகளை அகற்றினர்.

கனி மார்க்கெட் ஜவுளி கடை வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் அளித்த பேட்டியில், மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தி, பல ஆயிரம் ரூபாய் மாத வாடகை செலுத்தி கடை நடத்துகிறோம். சுற்றி உள்ள பகுதியிலும், பல ஆயிரம் ரூபாய் வாடகையில் நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் செயல்படுகிறது. அக்கடைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் செல்ல விடாமல், சாலையை முழுவதும் ஆக்கிரமித்து தற்காலிக ஜவுளி கடைகளை போட்டால், எங்களது கடைகளுக்கு மக்கள் வராத நிலை ஏற்படுகிறது.

தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனை முக்கியமானது. ஆண்டுக்கு ஒரு முறை நடப்பதை, மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு, எங்களது வியாபாரத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டு பேசினால், ஒரு அதிகாரியும் வர மறுக்கின்றனர். போலீசார் வந்து, தற்காலிக கடைகளை அகற்றினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் கடை போடுகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, வரும் ஆண்டுகளில் நிரந்தர கடைகளில் விற்பனை நடக்கும் என கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது