அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 473.80 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் மூலக்கடை பகுதியில் உள்ள ஓடை வழியாக ஏரிகளுக்கு செல்வதை படத்தில் காணலாம்.
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து இன்று (12ம் தேதி) காலை நிலவரப்படி வினாடிக்கு 473.80 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணை 33.46 அடி நீர்மட்ட உயரமும், 139.600 மி.கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கும்பரவாணிப்பள்ளம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 29ம் தேதி அதிகாலை 5 மணிக்கு வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
அன்றில் இருந்து வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், நேற்று (11ம் தேதி) அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்தது. இதனால், இன்று (12ம் தேதி) காலை அணைக்கு வரும் 473.80 கன அடி நீர் முழுவதும், அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த உபரிநீரானது ஓடைகள் வழியாக அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஏரி மற்றும் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இதன்காரணமாக ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu