ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரைவில் வாசிப்பு இயக்கம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பள்ளி குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும், இயல்பாக உரையாடவும், வாசிப்பின் ஊடாக சமூக சிந்தனையை வளர்த்து உணர்வுகளை வெளிக்கொணரும் விதமாக வாசிப்பு இயக்கத்தை நடத்திட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முன்னோட்ட ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 93 அரசுப் பள்ளிகளில் 13 கருத்தாளர்களைக் கொண்டு வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு 53 வகையான கதைப்புத்தகங்கள் வழங்கப்பட்டு ஜூலை 2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வாசிப்பு இயக்க கருத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணைப்படி அரசுப் பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு வகுப்புகள் ஒன்றரை மணி நேரம் வீதம் வாசிப்பு இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். விளையாட்டு, சுயவாசிப்பு, பின்னூட்டம் என்ற உள்ளடக்கத்தினை கொண்டதாக செயல்பாடுகள் உள்ளது. இதன் அடிப்படையில் சிறு சிறு படைப்புகளை உருவாக்கும் விதமாக முதன்மைக் கருத்தாளர்கள், கருத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறார் எழுத்தாளர்களைக் கொண்டு பல கட்டங்களாக பணிமனை மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்றது.
இப்பணிமனையில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்திற்காக கதை புத்தகங்கள் ”நுழை, நட, ஓடு, பற” என்ற வகையில் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் பிரிவுகளின் எண்ணிக்கைக்கேற்ப 53 வகையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. சமவெளிப் பகுதிகளில் மாணாக்கர் வாசிப்புக்கும், மலைப்பகுதி மாணாக்கர் வாசிப்புக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும், படைப்புக் குழு மூலம் கதைகள் உருவாக்கம் சார்ந்தும் முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வாசிப்பு இயக்க கருத்தாளர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டு அனுபவ பகிர்வு மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மாணாக்கர்கள் நுழை, நட, ஓடு, பற ஆகிய நான்கு நிலைகளில் எந்த நிலையில் உள்ளனர் எனவும், 3 மாத கால அளவில் மாணவனின் முன்னேற்றம் கண்டறியப்பட்டு வாசிப்பு இயக்கத்தின் அவசியம் உறுதி செய்யப்படவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu