அந்தியூர் அருகே பெய்த பலத்த மழையால் 80 வீடுகளை சூழ்ந்த மழைநீர்

அந்தியூர் அருகே பெய்த பலத்த மழையால் 80 வீடுகளை சூழ்ந்த மழைநீர்
X

வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பெய்த பலத்த மழையினால் 80 வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று நள்ளிரவு வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 107.20 மி.மீ மழை பதிவானது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை ஏற்கனவே நிரம்பிய நிலையில், அணைக்கு வரும் 1,767 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேறி வருகிறது.இப்படியாக வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரானது எண்ணமங்கலம் ஏரி வழியாக ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்கிறது. தற்போது எண்ணமங்கலம் ஏரியும் நிரம்பியுள்ளதால் வெளியேறும் தண்ணீரானது அந்தியூர் - பர்கூர் பிரதான சாலையில் மூலக்கடை பகுதியில் சாலையை மூழ்கிய படி தண்ணீர் சென்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.


இதேபோல் அந்தியூர் பெரிய ஏரியும் நிரம்பியுள்ளதால், வெளியேறும் உபரிநீரானது அந்தியூரில் இருந்து ஆதிரெட்டியூர் வழியாக வெள்ளித்திருப்பூருக்கு செல்லும் சாலையை மூழ்கிய படி தண்ணீர் சென்றது. மேலும், வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக கொட்டிய கனமழையால் மாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரம்புதூர் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் வெள்ளித்திருப்பூர், பாரதிநகரில் சுமார் 80 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த 250 பேரை அந்தியூர் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகள் வருவாய்த்துறையினர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், ஆப்பக்கூடல் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வரும் நிலையில், இதேபோல் மழை தொடர்ந்தால் பவானி - சத்தியமங்கலம் பிரதான சாலையை தண்ணீர் முழ்கிய படி செல்ல வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையின் காரணமாக அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை, அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிச்சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, கரும்பாறைபள்ளம் ஏரி, தண்ணீர் பந்தல் ஏரி, வேம்பத்தி ஏரி, பிரம்மதேசம் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய 9 ஏரிகளும் முழுமையாக நிரம்பி உபரிநீரானது வெளியேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல் பவானி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டிபாளையம் காலனி பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது, மேலும் அந்தியூர் பவானி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்தியூர்-பவானி இடையே சுமார் இரண்டு மணி நேரம் அந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டன. அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை, பவானி செல்லும் அண்ணாமடுவு பகுதியில் ரோட்டை கடந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அந்தியூர் போலீசார் போக்குவரத்து போலீசார் உதவியுடன் அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:- வரட்டுபள்ளம்-107.20, பவானி-76, கொடிவேரி-52, குண்டேரிபள்ளம்-48.6, பவானிசாகர்-46.60, ஈரோடு-43, சத்தியமங்கலம்-40, அம்மாபேட்டை-39.60, மொடக்குறிச்சி-35, பெருந்துறை-32, சென்னிமலை-28, எலந்தகுட்டைமேடு-26.60, நம்பியூர்-26, தாளவாடி-24, கவுந்தப்பாடி-21.20, கொடுமுடி-10.20, கோபி செட்டிபாளையம்-7.50.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil