பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி இந்தியாவுக்கு பொற்காலம்: ஏ.சி.சண்முகம்

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி இந்தியாவுக்கு பொற்காலம்: ஏ.சி.சண்முகம்
X

புதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என்று புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

புதிய நீதி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், பி.தங்கமணி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, மு.தம்பிதுரை, கே.வி. ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அதன்பின் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, 24, 25 தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளேன். தமிழகத்தை பொறுத்த வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக தான்.

சமீபத்தில் ரஷ்யாவில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்கள். அப்போது அங்கு மோடி தலைமையிலான ஆட்சியில் நடந்த பல்வேறு வளர்ச்சிகள் குறித்து பேசப்பட்டது. புதின் உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி தயாரித்து ரஷ்ய மக்களை காப்பாற்றினார். அதேபோல மோடி நமது நாட்டில் 132 கோடி மக்களுக்கும் உள்ளூரிலேயே கொரோனா ஊசி தயாரித்து மக்களை காப்பாற்றினார். முன்பெல்லாம் சாதாரண ஒரு துப்பாக்கி கூட இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது பல நாடுகளுக்கு நாம் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். நான்கு வழி சாலை ஆறுவழிச் சாலை என போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு உள்ளன. பல்வேறு துறைகளில் நமது நாடு மோடியின் ஆட்சியில் வளர்ந்துள்ளது.

திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்துவரி, பால் விலை மற்றும் இதர வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. மின்கட்டண உயர்வால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இதுவரை அவற்றை நிறைவேற்றவில்லை. எனவே அதை நினைவுபடுத்தும் தேர்தலாக இது அமையும். இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்களைக் கொண்டு பணத்தை வாரி இறைத்தாலும் திண்டுக்கல் தேர்தல் முடிவு போல் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!