ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரம்
X

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனல் தெறிக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில், கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் 21 மாத கால ஆட்சிக்கு மக்கள் மதிப்பெண் அளிக்கும் தேர்தலாக இது உள்ளது.

எனவே கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக இந்த தேர்தல் களத்தை தீவிரமாக கண்காணித்து வருவதுடன், அமைச்சர் துரைமுருகனை ஈரோடு களத்துக்கு நேரில் அனுப்பி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார். அவருக்கு உறுதுணையாக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இதுபோல் 25க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை முழுமையாக ஒருங்கிணைத்து வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மற்றும் 25-ம் தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கிறார்.

அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இது மிக முக்கியமான தேர்தல். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லாமல் அதிமுகவை தாங்கிப்பிடிக்க தன்னால் முடியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் தேர்தல் யுக்திகளை வகுத்து செயல்பட்டு வருகிறார். எனவே தேர்தல் அறிவித்த நாள் முதல் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு அடிக்கடி வந்து நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்.

அதிமுக அணிக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி, காமராஜ், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் என பலரும் ஈரோட்டில் முகாமிட்டு வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி 3 நாள் தொடர் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 2ம் கட்ட பிரசாரத்தை 24 மற்றும் 25ம் தேதி மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

அதிமுகவின் கூட்டணி கட்சியான த.மா.கா. தொடக்க நாள் முதலே வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்து உள்ளார். பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 2 நாட்களாக வீதி வீதியாக சென்று தென்னரசுவுக்கு ஆதரவு திரட்டினார்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்பட அனைவரும் ஈரோட்டுக்கு வந்து வார்டு வாரியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணியில் புதிதாக இணைந்து உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். தேமுதிக சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்து, 2ம் கட்டத்தை துவக்க உள்ளார்.

இப்படி ஒட்டுமொத்த கட்சிகளின் தலைவர்களும் ஈரோட்டை நோக்கி படை எடுத்தவண்ணம் இருக்கிறார்கள். தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், அனல் பறக்கும் பிரச்சாரங்களால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!