கர்நாடகாவுக்கு கடத்த முயற்சி.. ஈரோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்…

கர்நாடகாவுக்கு கடத்த முயற்சி.. ஈரோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்…
X

ஈரோடு அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் வாகனம்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார், பல்வேறு பகுதியில் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால், அங்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசியை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி சட்ட விரோதமாக கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இந்தநிலையில், இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வத்துக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், தாளவாடி போலீஸார் மகாராஜன்புரம் வன சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 30-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், லாரியை ஓட்டி வந்தது தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. மேலும், தாளவாடி மலைப்பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனைக்காக கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸார், ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் தொடர்ந்து ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil