ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முதல்வரிடம் மனு

Erode news- முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்த ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் மனு வழங்கினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் திருமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல், செயலாளர் இராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஈரோட்டில் பிரசாரத்துக்கு வந்த, முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அனைத்து வணிக மைய கட்டிடங்களையும், அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளே தங்களது பகுதியில் தொழில் சூழல், வருவாய் சூழலை கணக்கில் கொண்டு பொது ஏலத்தில் விடவோ, பழைய வணிகர்களுக்கு முன்னுரிமை வழங்கிடவோ, அனுமதி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
ஈரோடு மாநகருக்கான அனைத்து பொருட்களும் (மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், காய்கறி, பழங்கள், கறி, மீன் விற்பனை போன்ற கடைகள்) உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மார்க்கெட் மாநகராட்சி எல்லைக்குள் அமைத்து உடனடியாக வியாபாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஈரோடு மாநகரின் சுற்றுச்சூழலை பாதிக்கும் தோல் பதனிடும் தொழில் மற்றும் சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட, ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
ஈரோட்டிற்கென உணவுப் பகுப்பாய்வு கூடம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். கடைகளுக்கு நகராட்சிகள் தொழில் வரி வசூல் செய்கிறது. அவ்வரி எவ்விதத்தில் கணக்கிட்டு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் அறிவிப்பு பலகைகளில் வெளிப்படையாக வைக்க வேண்டும். பழைய பொருட்களை பிளாஸ்டிக், இரும்பு கழிவுகள் வாங்கி விற்பவருக்கு பாரத பிரதமரின் (Swachh Bharat) தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதி வேலையாக கருதி அத்தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
நாட்டின் நிதி சுழற்சி முழுவதும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மாறி வருவதால், கூகுள் பே, போன் பே போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு இனி வரும் காலங்களில் எவ்வகையான சேவை கட்டணங்களும் வசூல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கு, கேரி பேக்குகள் போன்றவற்றிக்கு மாற்றாக இயற்கை மக்கும் பொருட்கள் கொண்ட பைகள் மைய அரசே உற்பத்தி செய்து வழங்கிட வேண்டும் அல்லது அத்தொழிலுக்கு மானியத்துடன் கடன் வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்.
வணிகர் நலவாரியம், நலவாரிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் நியமனத்தோடு முழுமை பெற்ற வாரியமாக வணிகர் நலன்காத்திட வேண்டும். பொட்டலப் பொருட்கள் மற்றும் எடையளவு உரிமை பெற தொழிலாளர் நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை என இருவேறு துறைகளின் கீழ் உரிமம் பெற வேண்டும் என்ற நிலை சட்டம் முரண்பாடு உடையது. இரட்டை உரிம முறையை நீக்கி ஒரே துறையின் கீழ் (உணவு பாதுகாப்புத் துறை) மட்டுமே உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைத்திட வேண்டும்.
உணவு தானியங்களை சேமித்து, பாதுகாப்பாக வைப்பதற்கு மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்குகள், தமிழக அரசே அமைத்து குறைந்த கட்டணத்தில் வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது ஈரோடு அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மேலும் விரிவுபடுத்தி தெற்கே மூலப்பாளையம் வரையிலும், வடக்கே காவிரி ஆற்றுப்பாலம் வரையிலும் கொண்டு செல்ல வேண்டும்.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் மின்கட்டணங்கள் மாதம் ஒருமுறை கணக்கீடு வசூல் செய்யும் நடைமுறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். மின் நிலைக் கட்டணம் வசூல் செய்வதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கு முக்கிய பங்காற்றி வரும் பவானிசாகர் அணையை கட்டித் தந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை பவானிசாகர் பேருந்து நிலைய வணிக வளாகத்திற்கு மீண்டும் அவருடைய பெயரையே வைக்க பவானிசாகர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆணையிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை மனுவில் தெரிவித்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu