மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்

மரவள்ளிக்கிழங்கு (பைல் படம்)
மரவள்ளி கிழங்கு விலை ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வகையில் வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, சத்தி, தாளவாடி, பர்கூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
இங்கு சாகுபடி செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இடைத்தரர்கள் ஆதிக்கம், கலப்படம் உள்ளிட்ட காரணங்களால் மரவள்ளி கிழங்கு விலையானது ஒரு நிலையாக இருப்பது இல்லை.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் இருந்து வருகின்றது. விலை ஏற்ற இறக்கங்களை சரி செய்து விவசாயிகளுக்கு கட்டுபடியாகின்ற நிலையில் விலையை வைப்பதற்கு மரவள்ளிகிழங்கு வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகின்றது.
ஆனால் இடைத்தரர்கள் ஆதிக்கம் காரணமாகவும், கிழங்கு அரவை மில்களில் மக்காச்சோளம் உள்ளிட்ட கலப்படங்களினாலும் விலையில் நிலையற்ற தன்மை இருந்து வருகின்றது. கடந்தாண் டு ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.15 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் தற்போது டன் ரூ.11 ஆயிரமாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மரவள்ளி கிழங்கு வாரியம் அமைப்பது அவசியமாகிறது. மேலும் ஜவ்வரிசி கலப்படத்தை தடுக்கும் வகையில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் ஒருங்கிணைந்து குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu