பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவன உரிமையாளர்
சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் பெருந்துறை யூனிபிரண்ட் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் நவநீதன், கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் தென்னை நார் தரை விரிப்புகளை விரித்த போது எடுத்த படம்.
பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ரூ.80 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகளை பெருந்துறை ஜவுளி நிறுவன உரிமையாளர் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நேரத்தில் நடந்து செல்லும்போது பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்காக, ஏற்கெனவே தேங்காய் நாரால் செய்யப்பட்டு, நடைபாதையில் விரிக்கப்பட்ட தரைவிரிப்புகள் சேதமடைந்து காணப்பட்டது. மேலும், தரையில் நடக்கும்போது வெயில் பாதிக்காமல் நடந்து செல்லும் வகையில் டேம் புரூப் எனப்படும் பெயிண்ட் அடிக்கப்பட்டது.
ஆனாலும், அதிகப்படியான வெயிலால் பக்தர்கள் பகல் நேரத்தில் தரையில் நடக்க முடியாத அளவுக்கு சூடு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், பக்தர்கள் பாதுகாப்புடன் கோவிலைச் சுற்றி வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, கோவிலுக்கு வழக்கமாக வரும் பெருந்துறையைச் சேர்ந்த யூனிபிரண்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நவநீதன், தென்னை நார் தரை விரிப்புகள் வழங்க முன்வந்தார்.
இதையடுத்து, கேரள மாநிலம் அலப்பியில் உள்ள தென்னை நார் கூட்டுறவு சங்கத்தில் தரை விரிப்புகள் ரூ.80 ஆயிரம் மதிப்பில் வாங்க முடிவு செய்யப்பட்டு, ஆர்டர் கொடுக்கப்பட்டது. தரை விரிப்புகள் தயாரான நிலையில் நேற்று வாகனம் மூலம் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை, நவநீதன், அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் சங்கமேஸ்வரர் கோவில் வடக்கு ராஜகோபுரம் தொடங்கி ஆதிகேசவப் பெருமாள் சன்னதி, வேதநாயகி அம்மன் சன்னதி மற்றும் சங்கமேஸ்வரர் சன்னதிக்கு செல்லும் வகையில் சுமார் 250 மீட்டர் தொலைவுக்கு தரை விரிப்புகள் விரிக்கப்பட்டது. கடுமையான வெப்பம் தரையில் இருந்தாலும், நடக்கும்போது பாதத்தில் அதன் சூட்டை வெளிப்படுத்தாமல் தாங்கும் வகையில் தடிமனாக தென்னை நார் தரை விரிப்பு உள்ளது. இதற்கு, கடுமையான கோடை காலத்திலும் நடந்து செல்ல முடியும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu