பெருந்துறை சாகர் இண்டர்நேசனல் பள்ளியில் 14வது ஆண்டு விழா கொண்டாட்டம்
பெருந்துறை சாகர் இண்டர்நேசனல் பள்ளியின் 14வது ஆண்டு விழாவில் கடந்த பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த தீனதயாளன் என்ற மாணவனை பள்ளியின் தலைவரும், தாளாளருமான செளந்திரராசன் பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கினார். உடன், சாகர் அறக்கட்டளையின் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பழனிசாமி, லதா சௌந்திரராசன் ஆகியோர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாகர் இண்டர்நேசனல் பள்ளியில் 14வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, சாகர் அறக்கட்டளையின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளரும், செயலாளருமான சௌந்திரராசன், பொருளாளர் பழனிச்சாமி, துணை தலைவர் கிருஷ்ணன், இணைச்செயலாளர் சாமிநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். லதா சௌந்திரராசன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பள்ளியின் முதல்வர் ஷீஜா ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் கல்வி இயக்குநர் சுரேந்திர ரெட்டி சாகர் அகாடமியின் சாதனைகளையும் ஐ.ஐ.டி மற்றும் நீட் ரிப்பீட்டர்ஸ் வகுப்பின் செயல் திட்டங்களையும் விவரித்து பேசினார். தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் சௌந்திரராசன் பேசுகையில், கல்வி என்பது மதிப்பெண் அடிப்படையில் தரம் பிரித்தாலும், கல்வியைத்தாண்டி என்ற சிறப்பு பயிற்சியின் மூலம் வாழ்வில் கடக்க வேண்டிய மேடு, பள்ளங்களை புரியவைத்து எதிர்காலத்தில் தடுமாறாமல் தலைநிமிர்ந்து நடக்க வழிகாட்டப்படுகிறது என்றார்.
இதையடுத்து பள்ளியில் கடந்த ஆண்டு பொதுதேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் 2023-2024ம் ஆண்டில் வகுப்பு பதிவேட்டில் 100 சதவீதம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. கொங்கு மண்டலத்தின் நாகரிகம், பண்பாட்டை வெளிபடுத்தும் வகையில் மங்கை வள்ளி கும்மி குழுவினரின் 105வது அரங்கேற்றம் நடைபெற்றது.
பின்னர், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவிகளின் தலைவி வருணிகா வரவேற்றார். முடிவில், பள்ளியின் ஒருங்கிணைபாளர் இந்துமதி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu