சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது
கைது செய்யப்பட்ட கோதண்டன்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பவானிசாகர், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, கரடி, செந்நாய், கழுதைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகத்துக்குட்பட்ட கே.என்.பாளையம் அருகே உள்ள ஆரியங்கோம்பை வனச்சரகப்பகுதியில் சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பையை சேர்ந்த மீசை என்கிற கோதண்டன் (வயது 49) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, டார்ச் லைட் பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu