ஈரோடு மாவட்டத்தில் 1,517 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
ஈரோடு நசியனூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் சிற்ப கலைக்கூடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,517 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ம் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கி உள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 1,517 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் 1,517 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் ஆகும். புதிதாக எந்த ஒரு இடத்திலும் சிலை வைக்க அனுமதி தரப்படவில்லை.
வரும் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதற்காக 48 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை மற்றும் ஊர்வலம் பாதை பாதுகாப்பு பணியில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
சத்தியமங்கலம், புளியம்பட்டி, தாளவாடி பகுதிகள் ஊர்வலத்தின் போது பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஊர்வலத்தின் போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu