வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்கு செலுத்த 12 வகையான ஆவணங்கள்

ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான மாற்று ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என ஈரோடு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் நாளான நாளை (ஏப்ரல் 19) ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் வாக்குகளை 100 சதவீதம் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குசாவடிகளிலும் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள், கர்ப்பினி பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் ஆகியோருக்கு தனி வரிசை ஏற்படுத்திட உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
i. ஆதார் அட்டை,
ii. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,
iii. புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,
iv. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை,
V. ஓட்டுநர் உரிமம்,
vi. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card),
vii. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப்பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,
viii. இந்திய கடவுச்சீட்டு,
ix. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
X. மத்திய / மாநில அரசுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
xi. பாராளுமன்ற /சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை,
xii. இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை,
1950- ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20A-ஆம் பிரிவின் கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu