நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் இரு மாநில அதிகாரிகள் ஆய்வு
காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இரு மாநில அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது குறித்து இரு மாநில அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக தேர்தல் ஆணையம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் மாநில எல்லைகளில் பதற்றத்தை தவிர்க்க அதிகாரிகள் கூட்டு சோதனை மற்றும் அமைதி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பக ஆசனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கூட்டு சோதனை நடத்தினர். அதன்படி, ஈரோடு மாவட்ட ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தமிழக அதிகாரிகளும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட துணை ஆணையர் ஷில்பா நாக் தலைமையில் கர்நாடக அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், சாம்ராஜ் நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்மினி சாகு, சத்தியமங்கலம் புலிகள் காப்பக ஆசனூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் சுதாகர், சாம்ராஜ் நகர் மாவட்ட வன பாதுகாவலர் தீப்.ஜெ.கான்ரக்டர், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu