கோபியில் பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்கத்தின் அலுவலகம் திறப்பு
பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தின் தலைமை அலுவலக திறப்பு விழாவில், இத்திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்கத்தின், தலைமை அலுவலகம் திறப்பு விழா கோபியில் திங்கட்கிழமை (நேற்று) நடந்தது.
பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை ஆகிய பாசனங்கள் பயனடைந்து வருகின்றது. இப்பாசனங்கள் மூலம் கசிவு நீர் திட்டங்கள் உள்பட ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. தற்போதுள்ள நிலையில், அணைக்கு வரும் தண்ணீர் வரத்தை விட 10 முதல் 25 டிஎம்சி கூடுதலாக இருந்தால் மட்டுமே அனைத்து பாசன தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகின்றது.
எனவே பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டுமெனில் பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்கத்தின், தலைமை அலுவலகம் திறப்பு விழா கோபி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எஸ்.டி.என் காலனியில் நடந்தது. கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பின் தலைவர் ராமசாமி, அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இணை செயலாளர் வெங்கடாசலபதி, ஏர்முனை உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு, இந்த இயக்கத்தின் தலைமை அலுவலகமாக, கோபி அலுவலகம் இருக்கும் என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu