உலக பழங்குடியினர் தினம்: சத்தியமங்கலம் கடம்பூரில் பாரம்பரிய நடனமாடிய மக்கள்
கடம்பூரில் பாரம்பரிய நடனமாடிய பழங்குடியின மக்கள்.
உலக பழங்குடியினர் தினத்தையொட்டி, சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் பழங்குடியின மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.
உலகமெங்கும் வசிக்கும் பழங்குடியின மக்களை போற்றும் வகையில், ஆண்டு தோறும் ஆகஸ்ட் 9ம் தேதி உலக பழங்குடியினர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் , இன்று (9ம் தேதி) உலக பழங்குடியினர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த மலைப்பிரதேசமான கடம்பூரில் பரண் டிரைபல் சொசைட்டி மற்றும் பழங்குடி ஊராளி மக்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்ட தாட்கோ மேலாளர் அர்ஜூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போதை பொருட்களை இல்லாத வனப்பகுதியை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை ஏற்ற பின் பாரம்பரிய நடனமாடினர். பின்னர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாட்கோ மேலாளர் அர்ஜூன் பேசுகையில், பழங்குடியின மக்களுக்காக அரசு ஏற்படுத்தி தரும் தொழில் வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட கடம்பூர், குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம், திங்களூர் பகுதிகளை சேர்ந்த கிராம மக்களின் சார்பில் பழங்குடி ஊராளி மக்கள் சங்கத்தின் தலைவர் வேல்முருகன் மற்றும் துணைத்தலைவர் பத்மா ஆகியோர் போதை பொருட்களை தடுத்தல் உள்ளிட்ட 6 தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினர். நிகழ்ச்சியில் கடம்பூர் நில வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி , காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் விஜயபாஸ்கர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை பரண் இயக்குனர்கள் உதயபிரகாஷ், கென்னடி மற்றும் செல்வன், கோகுல், மாதேஷ், மதன், ரங்கசாமி ஆகியோருடன் சகாயமேரி, லீமா, புளோரா, மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் இணைந்து நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu