அந்தியூர் குருநாதசுவாமி கோயிலில் ஆடித்தேர் திருவிழா நாளை துவக்கம்: 700 போலீசார் பாதுகாப்பு
குருநாதசுவாமி கோயில் திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.
அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா நாளை (7ம் தேதி) துவங்குகிறது. இத்திருவிழாவையொட்டி, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (7ம் தேதி) புதன்கிழமை தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, தென்னிந்திய அளவில் குதிரை மற்றும் கால்நடை சந்தை நடைபெறுகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொள்வர்.
இந்நிலையில், திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் (நேற்று 5ம் தேதி) மாலை நடைபெற்றது. இந்த கூட்டமானது, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, வட்டாட்சியர் கவியரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஆனந்த், வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், குருநாதசுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் சாந்தப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாறன், குருசாமி, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத்திருவிழாவையொட்டி, நாளை முதல் விழா நிறைவு பெறும் வரை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 3 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 6 காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்க 160 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu