சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் சாலை வசதி கேட்டு நூதன ஆர்ப்பாட்டம்
மொட்டை அடித்து, பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சாலை வசதி கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒன்றிணைந்து பாடை கட்டி ஊர்வலமாக சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப் பகுதியில் சின்னசாலட்டி, கோட்டகாடு, அணைக்காடு, குட்டைகாடு, எள்ளு படுகை ஆகிய கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமப் பகுதி மக்களுக்காக குத்தியாலத்துார் ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தார்சாலை அமைப்பதற்காக வைக்கப்படிருந்த ஜல்லி கற்களை சாலை அமைக்காமல் மீண்டும் அள்ளிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், கிராமங்களுக்கு உடனடியாக கான்கிரீட் தளம் அமைத்து தரக் கோரியும் பொதுமக்களின் சார்பில் கடம்பூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (22ம் தேதி) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு 2வது வார்டு யூனியன் கவுன்சிலரை கண்டா வர சொல்லுங்க என நோட்டீஸ் அடித்தும், பாடை கட்டி, மொட்டை அடித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாரதி, மாதர் சங்க மாநில துணை தலைவர் ராணி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராம மக்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மொட்டை அடித்து, பாடை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் அவர்களிடமிருந்த உருவபொம்மையை பறிமுதல் செய்தனர். இதனால் கடம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu