இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை: சத்யபிரத சாகு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (பிப்.20) காலை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் மனு ஒன்றை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அளித்தார்.
இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறுகையில், ஈரோடு கிழக்கில் இதுவரை ரூ.61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பான காணொளிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதால் C-விஜில் செயலி மூலம் புகார்களை அனுப்பலாம். சி - விஜில் செயலிமூலம் ஒரே ஒரு புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
சி- விஜில் செயலி மூலம் அனுப்பினால் அனுப்புபவரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படாது. ஈரோடு கிழக்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு சுமூகமான முறையில் உள்ளது. பல புகார்கள் வந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி இதுவரை புகார் எதுவும் வரவில்லை. கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார்கள் குறித்தும் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu