சென்னிமலை அருகே தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த மூகமுடி கொள்ளையர்கள்
Erode news- கொள்ளை நடந்த வீட்டின் முன்பு குவிந்த அக்கம் பக்கத்தினர்.
Erode news, Erode news today- சென்னிமலை அருகே தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை சென்னிமலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் - சின்னம்மாள் தம்பதி. இவர்களுக்கு, கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் ரம்யா என்ற மகளும் உள்ளனர். மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அந்தத் திருமணத்தின் ஒரு பகுதியாக இன்று (செப்.8) திருமண பத்திரிகைகள் தயாரான நிலையில், அருகில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று முதல் பத்திரிக்கையை சுவாமிக்கு வைத்து தரிசனம் செய்து விட்டு வரலாம் என தாயார் சின்னமாளுடன் மகன் கோகுலகிருஷ்ணன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
தந்தை விஸ்வநாதனும், மகள் ரம்யா ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு, வீட்டிற்குள் நுழைந்து விஸ்வநாதனையும், ரம்யாவையும் கத்தி காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாக கூறி பணம் நகைகளை எங்கு வைத்துள்ளீர்கள் என கேட்டு மிரட்டி உள்ளனர்.
உடல் நலம் சரியில்லாத விஸ்வநாதனும், உயிருக்கு பயந்த ரம்யாவும் பணம் பீரோவில் உள்ளது என கூறினர். இதனையடுத்து பீரோவிலிருந்த 5 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கோயிலுக்கு சென்று இருந்த கோகுலகிருஷ்ணனும் தாயார் சின்னம்மாளும் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, தந்தை விஸ்வநாதன், தங்கை ரம்யாவும் கட்டிப்போட்டு விட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளிட்டவர்களின் உதவியுடன் சென்னிமலை காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் தந்தை, மகளைக் கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் 5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சென்ற சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu