ஈரோடு அரசு மருத்துவமனையில் மிக விரைவில் எம்ஆர்ஐ கருவி பொருத்தம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Erode News- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவு வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்த போது எடுத்த படம். உடன், அமைச்சர் முத்துசாமி உள்ளார்.
Erode News, Erode News Today- ஈரோடு அரசு மருத்துவமனையில் மாதம் 300 பிரசவம் வரை நடக்கிறது. குழந்தை திருட்டை தடுக்க மருத்துவமனையில் இருந்த பல வழிகள் அடைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் இன்று (11ம் தேதி) ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் 20 கட்டண படுக்கையறை பிரிவை அமைச்சர்கள் சுப்பிரமணியன், முத்துசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி அமைந்ததும், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3 துணை சுகாதார நிலையங்கள், 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர் குடியிருப்பு, சித்தமருத்துவம், மருத்துவக் குடியிருப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தில் ரூ. 15 லட்சம் செலவில் சித்தமருத்துவப் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கோபி அரசு மருத்துவமனையில் ரூ. 6.89 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர், சி.டி. ஸ்கேன் போன்ற பல்வேறு வசதிகள் ரூ. 2.96 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பவானி அரசு மருத்துவமனையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை, ரூ. 29.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எட்டு அடுக்கு கொண்ட, ரூ 67.12 கோடி மதிப்பிலான கட்டிடம், ரூ. 11 கோடிக்கு உபகரணங்கள் என ரூ. 78.12 கோடி மதிப்பிலான மருத்துவமனை மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வரால் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் உலக தரத்துடன் கூடிய 7 அறுவைச் சிகிச்சை அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனைக்கு ரூ. 8.5 கோடி மதிப்பிலான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்து தர பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்துள்ளார். மிக விரைவில் எம்.ஆர்.ஐ. கருவி பொருத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், அரசு மருத்துவ சேவையை பொதுமக்கள் கூடுதலாக பயன்படுத்தி வருகின்றனர். எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது. இவ்வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 16 இடங்களில் இது போன்ற கட்டண படுக்கை அறை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது
கோவை, மதுரை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த கட்டண படுக்கை அறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி மருத்துவச் சிகிச்சை பெறும் வகையில், 20 படுக்கை அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண அறைகள் குளிர்சாதன வசதியுடன், தனி கழிப்பறை, குளியலறை வசதி, தொலைக்காட்சி பெட்டி போன்ற வசதிகள் இருக்கும். ஈரோடு படுக்கை அறைக்கான கட்டணம் குறித்து, ஓரிரு நாளில் அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.
அரசு மருத்துவமனையில் கேத் லேப் வசதி ஏற்படுத்த ரூ. 12 கோடி செலவாகும். கோவை, சேலத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஈரோட்டில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால், புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்த 4 மாவட்டங்களில் வசிக்கும் 9.82 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, 4.19 லட்சம் பேர் பரிசோதனைக்கு வந்தனர். இதில், புற்றுநோய் இருக்கலாம் என 13 ஆயிரத்து 89 பேர் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் 3.29 லட்சம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. 1.27 லட்சம் பேரை பரிசோதனை செய்ததில், 3039 பேர் புற்றுநோய் இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதில், 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னால், 1,021 மருத்துவப் பணியிடங்கள், 927 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட்டன. 986 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நாளை நடக்கவுள்ளது. 2,253 மருத்துவர் பணியிடங்களுக்கு ஜூலை 15ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது. அதற்கான கேள்விகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்வுக்கு பிறகு அவர்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுவார்கள். 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் நிரப்புவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்குக்கு தீர்வு கிடைத்தவுடன் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். 2,250 கிராம சுகாதார செவிலியர்கள் நிரப்புவதிலும் வழக்குகள் உள்ளது.வழக்கு முடிந்தவுடன் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும். மகப்பேறு உதவித் திட்டம் ரூ. 18 ஆயிரம் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 5 ஆயிரம் ரூபாய் மத்திய அரசும், ரூ 13 ஆயிரம் மாநில அரசும் தருகிறது. படிப்படியாக தகுதியானவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் 137 பேர் பணியில் உள்ளனர். இவர்களை கூடுதலாக பணியில் அமர்த்துவது குறித்தும், அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார். முதல்வர் காப்பீடு திட்டத்தில் 1,900 மருத்துவமனைகளுக்கு மேல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த மருத்துவமனையிலாவது சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் மாதம் 300 பிரசவம் வரை நடக்கிறது. குழந்தை திருட்டை தடுக்கும் வகையில், இந்த மருத்துவமனையில் இருந்த பல வழிகள் அடைக்கப்பட்டுள்ளது. தவறு நேர்ந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.
நாமக்கல்லில் கிட்னி விற்பனை தொடர்பான புகாரில் சிக்கியவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்னி விற்பனை தொடர்பான தகவல் இருந்தால் ரகசியமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மேயர் நாகரத்தினம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu