கரும்பு ஆலை அரவை பகுதி மாற்றம்: அரச்சலூர் பகுதி கரும்பு விவசாயிகள் வரவேற்பு

கரும்பு ஆலை அரவை பகுதி  மாற்றம்: அரச்சலூர் பகுதி கரும்பு விவசாயிகள்  வரவேற்பு
X

அரச்சலூர் பகுதியில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி

அரச்சலூர் பிர்க்கா பகுதிகளை சக்திசர்க்கரை ஆலைக்கு மாற்றியதில் அரச்சலூர் பகுதி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

புகளூர் சர்க்கரை ஆலையில் இருந்து அரச்சலூர் பிர்க்கா பகுதிகளை சக்திசர்க்கரை ஆலைக்கு மாற்றிய நடவடிக்கைக்கு அரச்சலூர் பகுதி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பிர்க்கா விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைகின்ற கரும்புகளை சக்திசர்க்கரை ஆலை, பூந்துறைசேமூர் ஆலை அரவைக்கு பதிவு செய்வதை வரவேற்றுள்ளனர்.

ஈரோடுமாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பிர்க்கா பகுதியானது கீழ்பவானி பாசனத்தை முழுமையாக நம்பியுள்ளது. இப்பகுதியில் கரும்பு, நெல் மற்றும் வாழை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டாலும் கரும்புபயிரே முதன்மையாக உள்ளது. இதுவரை இப்பகுதி கரும்பு விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் கரும்புகளை அரவைக்காக புகளூரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். பல்வேறு காரணங்களால் இப்பகுதி விவசாயிகளின் கரும்புகளை உரிய காலத்தில் அறுவடை செய்யாமல் 17-18மாதங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் பொருளாதார ரீதியாக நஷ்டம் அடைய நேரிட்டது.

இதனிடையே கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி ஈ.ஐ.டிபாரி ஆலையின் அரச்சலூர் கரும்பு அலுவலகத்தை250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வருவாய் துறை மற்றும் காவல் துறை ஈ.ஐ.டிபாரிஆலை நிர்வாக தரப்பினரையும், கரும்பு விவசாயிகளையும் வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். நிர்வாகத் தரப்பில் முறையாக குறித்த காலத்தில் கரும்பு வெட்டி கொடுக்கின்றோம் என உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அரச்சலூர் பிர்க்கா பகுதி கரும்பு விவசாயிகள் 10 கி.மீக்கும் அருகிலுள்ள சக்தி சர்க்கரை ஆலை, பூந்துறை சேமூர் ஆலைக்கு கரும்புகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர்.

கடந்த 1999-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், பூந்துறைசேமூரில் திலான் இன்டர்னேசனல் பிரவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சர்க்கரை ஆலையை தொடங்க உரிமம் பெற்றது. சர்க்கரைதுறை ஆணையரால் சக்திசர்க்கரைஆலை, ஆப்பக்கூடல் ஆலையிலிருந்து சிலபகுதிகள் மற்றும் புகளூர் சர்க்கரை ஆலையில் இருந்து அரச்சலூர் பிர்க்கா பகுதியை மட்டும் புதிதாக உரிமம் பெற்ற திலான் சுகர்ஸ்க்கு ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் சக்தி சர்க்கரை ஆலை நிறுவனம், திலான் சுகர்ஸ் பங்குகளை முழுமையாக கடந்த 2006-ம் ஆண்டு கையகப்படுத்தியது.

அதன் பின்னர் சக்தி சர்க்கரை ஆலை, பூந்துறைசேமூர் பகுதியில் தனது சர்க்கரை ஆலையை நிறுவும் பணிகளை முழுவீச்சில் செய்தபோது, புகளூர் சர்க்கரை நிறுவனம் 2007-ல் சென்னை, உயர்நீதிமன்றத்தில் ஓர் தடையாணையை பெற்றது. 35வது கரும்பு எல்லை பகுதி நிர்ணயக்குழு பரிந்துரையின் படி, அரச்சலூர் பிர்க்காவை சர்க்கரைதுறை ஆணையர் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து சென்னை, உயர்நீதிமன்றத்தின் நீதிப் பேராணைதாக்கல் செய்து தடையாணையை பெற்றது. மேற்படி, நீதிப்பேராணை சென்னை, உயர்நீதிமன்றத்தால் கடந்த 26.07.22-ல் முடித்து வைக்கப்பட்டது.

மேற்படி, வழக்கில் சக்தி சர்க்கரை ஆலை, பூந்துறைசேமூர் (Impleading Petition) தாக்கல் செய்திருந்தது. சென்னை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, புகளூர் சர்க்கரை ஆலை, புகளூர் கரும்பு விவசாயிகள் சங்கம், சக்திசர்க்கரைஆலை மற்றும் அரச்சலூர், மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் சிவகிரி பகுதி கரும்பு விவசாய சங்கம் போன்றோரை பிரதிவாதிகளாக வைத்து, சர்க்கரை மற்றும் கரும்புத் துறை ஆணையர் கடந்த29.09.2022-ம் தேதியில் காணொலிகாட்சி வாயிலாக கருத்துகளை கேட்டறிந்தும், எழுத்துப் பூர்வமான அறிக்கையை பெற்றும் கடந்த 19.10.2022 தேதியன்று ஓர் ஆணையை பிறப்பித்துள்ளார்.

அதில், இருஆலைகளின் கரும்பு அரவை சராசரி பயன்பாட்டு அளவினை ஒப்பிட்டும், அரச்சலூர் பிர்க்கா பகுதிக்கும், சக்தி சர்க்கரை ஆலைக்கும் உள்ள இடைப்பட்ட தொலைவு (Distance) அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் காலவிரையம் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

கடந்த 1999-ல் அரச்சலூர் பிர்க்கா பகுதியை திலான் சுகர்ஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட போதே அதனை ஈடு செய்யும் விதமாக கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து கொடுக்கப்பட்ட கரும்பு பயிரிடும் பகுதிகள் மற்றும் கடந்த 2021-ம் ஆண்டு சர்க்கரைத் துறை ஆணையர் தற்காலிகமாக கரூர் மற்றும் திருச்சி மாவட்டஙகளில் இருந்து புகளூர் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சக்தி சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு கூடுதலாக எந்தவிதமான புதிய பகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

35வது கரும்பு எல்லை நிர்ணயக்குழு பரிந்துரையின்படி, அரச்சலூர் பிர்க்காவை புதிதாக பூந்துறைசேமூரில் தொடங்கப்பட்ட சக்தி சர்க்கரை ஆலைக்கு ஒதுக்குவதினால் ஏற்படும் விளிம்புநிலை பற்றாக்குறையை (Marginal shortfall) புகளூர் சர்க்கரை ஆலை கூடுதலாக ஒதுக்கப்பட்ட கரும்பு வரையறுக்கப்பட்ட பகுதிகளின் மூலமும் மற்றும் கரும்பு அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப் பணிகள் மூலமும் சரி செய்ய முடியும். எனவே, புதிதாக அமையவுள்ள சர்க்கரை ஆலைக்கு போதுமான கரும்பு பயிரிடும் பகுதிகள் தேவை என்பதால் தான் அரச்சலூர் பிர்க்காவை சக்தி சர்க்கரை ஆலை, பூந்துறை சேமூர் ஆலைக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்தது.

மேற்கண்டகாரணங்களின் அடிப்படையில் சர்க்கரைத் துறை ஆணையர் தனது 19.10.2022-ம் தேதியில் வெளியிடப்பட்ட ஆணையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அரச்சலூர் பிர்க்கா பகுதியில் காலம் காலமாக கரும்பு பயிரிடும் பெரும்பான்மையான கரும்பு விவசாயிகள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

கடந்தஆண்டுகளில் புகளூர் உள்ள ஆலைக்கு தங்களது கரும்பினை பதிவுசெய்து அனுப்பி வந்தனர். கடந்தவருடங்களில் கரும்பு அறுவடை பருவத்தில் அறுவடை செய்யாமல் 18மாதம் கழித்து அறுவடை செய்ததில் கரும்புகள் காய்ந்துசுமார் 15 டன்கள் ஏக்கருக்கு குறைத்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டதுடன் பலமுறை நிர்வாகத்தை அணுகிசரியான பதில் கிடைக்காததால் கடும் மனஉளைச்சலில் இருந்தனர். மேலும், புகளூர் ஆலைக்கு பதிவுசெய்து,கரும்பு வெட்டுவதில் பலகசப்பான அனுபவங்களை சந்தித்தார்கள்.14 மாதங்களுக்கு மேல் காலம் தாழ்த்திஅறுவடைசெய்ததால் வெட்டுக்கூலி, லாரி மாமூல் எல்லாம் போக நஷ்டம் தான் ஏற்பட்டது. தற்போதைய அரசு ஆணை இப்பகுதி விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கரும்புகளை அருகிலுள்ள சக்தி சர்க்கரைஆலை, பூந்துறைசேமூர் ஆலைக்கே அனுப்பி பயன் பெறுவார்கள்.

தற்போதைய தமிழக அரசு, கரும்புத் துறை ஆணையரின் உத்தரவினால் எங்கள் பகுதிஅருகிலுள்ள சக்தி சர்க்கரை ஆலை, பூந்துறைசேமூர் ஆலைக்கு ஓதுக்கீடு செய்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. உடனடியாக மேற்படிஅலுவலர்களை அணுகி கரும்பினை சக்தி சர்க்கரை ஆலைக்கே பதிவிட்டுள்ளனர்.

பல விவசாயிகள் இயற்கை முறைப்படி முட்டுவழி செலவை குறைக்கும் வகையில் அவர்களுடைய முயற்சியினால், கரும்பு அறுவடை இயந்திரத்தினை வைத்து கரும்பு வெட்டும் முனைப்புடன் 4 ½ அடி பார் அமைத்து கரும்பினை புகளூர் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்திருந்தனர். கரும்பு வெட்டும் தருவாயில் அவர்கள் முறைப்படி இயந்திரத்தை வைத்து பாதி வயலை அறுவடை செய்தனர். மீதிபாதி வயலை ஆட்களை வைத்து வெட்டினர்.

இதனால் அவர்களுக்கு மகசூல் குறைந்ததோடு நஷ்டமும் ஏற்பட்டது. எனவே,எங்கள் பகுதியினை இயந்திர அறுவடையில் அனுபவம் பெற்ற, சக்திசர்க்கரை ஆலைக்கு மாற்றியதை வரவேற்கின்றேன். சக்திநிறுவனம் கரும்பு அறுவடை இயந்திரத்தினை இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகவே இவர்கள் இயந்திரத்தின் மூலம் கரும்பு அறுவடை செய்வதில் அனுபவம் பெற்றவர்கள்.

நமதுபகுதி இயந்திர அறுவடைக்கு ஏற்ற பகுதி ஆகவே கரும்பு அறுவடை இயந்திரத்தின் மூலம் கரும்பு அறுவடை செய்வதனால் சிறு குறு விவசாயிகளுக்கு கூட இலாபம் ஈட்டி தரமுடியும். இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யப்படும் வயல்களுக்குரூ.7,500- மானியம் சக்தி சர்க்கரை ஆலை அறிவித்துள்ளது. எங்கள் பகுதி விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த 2-3 ஆண்டுகளாக கீழ்பவானி வாய்காலுக்கு மிக அருகில் உள்ள கரும்பு விவசாயிகள் பலர் பாரிஆலைக்குபதிவுசெய்தனர். வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கு முன்னர் கரும்பு வெட்டும் பருவம் வந்தும் கரும்புகளை வெட்ட சொல்லி பலமுறை முறையிட்டும் அறுவடை செய்யாததால் மிகுதியான வெட்டுக்கூலி கொடுத்ததோடு அல்லாமல் பகுதி கரும்புதான் வெட்ட முடிந்தது மீதி கரும்புகளை வெட்டமுடியாமல் வயலிலேயே நின்றுவிட்டது. இதனால் பெருத்த நஷ்டத்தினை அடைந்தனர்.

புகளூர் உள்ள சர்க்கரை ஆலை நிறுவனத்தின் குளறுபடிகளால் எங்கள் அரச்சலூர் பகுதியில் உள்ள கரும்புகளை நடவுசெய்து 12 மாதங்களிலும் கட்டை கரும்புகளை 11 மாதங்களிலும்; வெட்டி கொடுக்க வேண்டியதை தொடர்ந்து கடந்த 2-3 வருடங்களாக காலம் தாழ்த்தி அறுவடை செய்து கொடுப்பதாலும், தீ வைத்து வெட்டுவதாலும் தொடர்ந்து பொருளாதார இழப்பினையும், மனஉளைச்சலையும், பல்வேறுபட்ட இன்னல்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். தற்பொழுது எங்கள் பகுதி கரும்புகளை அருகாமையில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை, பூந்துறைசேமூர் ஆலைக்கு அனுப்புவதால் என்னற்ற நன்மைகளை அடையவுள்ளனர்.

புகளூர் சர்க்கரை ஆலையில் இருந்து அரச்சலூர் பிர்க்கா பகுதி கிராமங்களை சக்தி சர்க்கரை ஆலை, பூந்துறைசேமூர் ஆலைக்கு கரும்பு விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாகக் கொடுத்துள்ளார்கள் என்று ஓர் தவறான மற்றும் பொய்யான வாதத்தை கூறியுள்ளனர். தற்பொழுது சக்தி சர்க்கரை ஆலை குழுமம் நல்ல நிலையில் உள்ளதால் கடந்த அரவைப் பருவத்தில் பணப்பட்டுவாடா மற்றும் கரும்பு விவசாயிகளுக் குண்டான மானியத்தை வழங்கி வருகிறார்கள்.

இப்பகுதி விவசாயிகளுடைய கஷ்டம், நஷ்டம் முக்கியமாக கரும்பு நடவு முதல் அறுவடைவரை உள்ள கரும்பு விவசாயிகளுடைய சிரமங்கள் அனைவரும் அறிவீர்கள். புகளூர் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு நிகராகவும், அதற்கு மேலேயும் பலவசதிகளை எங்கள் அரச்சலூர் பிர்க்கா பகுதி கரும்பு விவசாயிகளுக்கு சக்தி சர்க்கரை ஆலை நிறுவனம் செய்து கொடுப்பதுமின்றி எங்கள் பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகின்றனர்.

எனவே, அரச்சலூர் பிர்க்கா கரும்பு விவசாயிகள் தேவையற்ற செய்திகளையோ, பொய்யான தகவல்களையோ நம்ப வேண்டாம். சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் இப்பகுதி கரும்பு விவசாயிகளுக்கு பல சலுகைகள் மற்றும் கரும்பு வெட்டிய குறுகிய காலத்தில் பணப்பட்டுவாடா செய்யும் என்ற நம்பிக்கை உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!