குப்பை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

மொடக்குறிச்சி அருகே, பாறைக்குழியில் கொட்டுவதற்காக குப்பைகழிவுகளை ஏற்றி வந்த லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக அம்மன் நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாறைக்குழி உள்ளது.

இதனை மூடுவதற்காக, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் இருந்து கழிவுகளை லாரிகள் மூலம் எடுத்து வந்து பாறைக்குழியை மூடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்ததுள்ளது.

இவ்வாறு பாறைக்குழியில் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் கலந்து விடுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் குப்பை கழிவுகளை ஏற்றி வந்த 8 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் கூறுகையில், அம்மன்நகர், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகள் போன்றவற்றில் குப்பைகள் கலந்து குடிநீர் மாசு ஏற்படுகிறது.

ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றியும் இனிமேல் குப்பை கழிவுகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைக எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!