ஈரோடு மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை : அமைச்சர் தொடங்கி வைப்பு..!
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து, ஊர்திகளின் சாவியை ஓட்டுநர்களிடம் வழங்கிய போது எடுத்த படம். அருகில், ஈரோடு எம்பி பிரகாஷ், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை அமைச்சர் முத்துசாமி இன்று (6ம் தேதி) தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனம் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்களின் சேவையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாம இன்று (6ம் தேதி) தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 2 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 6 கால்நடை மருத்துவமனைகள், 106 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 24 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 10,52,285 கால்நடைகள் மற்றும் 61,87,054 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டம் கால்நடை பன்முக மருத்துவமனைகள், மொடக்குறிச்சி, பவானி, தாளவாடி, அந்தியூர், பெருந்துறை வட்டம் சென்னிமலை, கொடுமுடி வட்டம் கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவமனைகள் என 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், இன்று (6ம் தேதி) 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்த்திகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனத்திற்கு மருந்துகள், பணியாளர் ஊதியம், தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் இதர செலவினங்களுக்காக ஒரு மாதத்திற்கு ரூ.1.63 லட்சம் வீதம் 7 வண்டிகளுக்கு ரூ.11.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதன் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் தலா 1 கால்நடை உதவி மருத்துவர்,1 கால்நடை உதவியாளர், 1 ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ ஊர்திகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், 1962 அழைப்பு மையம் (கால் சென்டர்) மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் 14 வாகனங்கள் என மொத்தம் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்களின் சேவையினை தொடங்கி வைத்து வாகனங்களின் சாவியை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் பழனிவேல், ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கவின் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu